அஷய வடத்தின் இலைகள் இலையுதிர்காலத்தில் கூட பசுமையாக உள்ளது
அஷய வடம் மரத்திற்கு அடியில் விக்கிரகங்கள் இருக்கின்றன. மரத்தை வலம் வந்து அதனடியில் அமர்ந்து காரியங்களை செய்யவேண்டும்.
மூன்றாவது கலசத்திலிருந்து தயாரித்த 64 பிண்டங்களிலிருந்து ஒரு பிண்டத்தை மட்டும் காகத்திற்கு வைத்தோம். அதுவரை தென்படாத ஒரு காகம் நாங்கள் பிண்டம் வைத்தவுடன் ஓடோடி வந்து பிண்டத்தை ரசித்து சாப்பிட்டது. அமாவாசை தர்ப்பணத்தின் போது கா கா என்று கத்தி வரும் காகம் அன்று கத்தாமலே வந்தது மட்டுமின்றி, ரசித்து சாப்பிட்டது. எங்கள் மூதாதையர் அவர் வடிவில் வந்து உணவருந்தி எங்களை ஆசீர்வதிததாக சந்தோஷமடைந்தோம். அஷய வடத்தில் படைக்கப்படும் பிண்டத்தை காகம் கிழக்கே எடுத்தால் செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
பொதுவாக சிரார்த்தத்தில் பெற்றோர்க்கும் மூதாதையருக்கும் தான் செய்வது வழக்கம். சாஸ்திரிகள் சங்கல்ப தர்ப்பண சிரார்த்த மந்திரங்கள் சொன்னபடி நாங்களும் எங்கள் எனது வழி எனது மனைவி வழி மூதாதையர்கள் அனைவருக்கும் தாய் வழி தகப்பனார் வழி உடன் பிறந்தோர் சகோதர சகோதரிகள் அத்தை மாமா சித்தி சித்தப்பா என அணைத்து உறவு முறையினருக்கும் தனி தனியாக பெயர் கூறியும் பெயர் தெரியாவிடின் உறவு சொல்லியும் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் உறவினர்கள் விபத்தினாலோ குறைப்பிரசவத்தலோ மரித்திருப்பின் அவர்களுக்கும் மற்றும் நண்பர்கள் வளர்ப்பு பிராணிகள் - நாங்கள் எங்களது உயிருக்கு உயிராக வளர்த்த Scooby யும் எங்கள் மேல் அளவு கடந்த பாசம் வைத்து உற்ற நண்பனாக இருந்து உயிர் நீத்த Scooby க்காக மீதியிருந்த 63 பிண்டங்களிலிருந்து பிண்டம் அளித்தோம்.
மூதாதையர்கள் அனைவரும் ஸ்வர்க்கத்தில் நீர், உணவு, ஆசை, பற்று இன்றி மறுபிரப்பின்றி, முக்தி அடையவேண்டி பிரார்த்தனை செய்து அங்குள்ள பிராம்னர்களுக்கு தானம் அளித்தோம். அவர்களும் மிகுந்த திருப்தியுடன் திருப்தி திருப்தி திருப்தி என்று சொல்லி ஆசீர்வதித்தனர்.
இந்த புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுகளை விட்டு விட்டதன் அடையாளமாக ஒரு காய், ஒரு பழம், ஒரு இலை ஆகியவற்றை மந்திரத்தை சொல்லி இங்கு துறந்தோம். பிறகு அவற்றை வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது.
அஷயவடதிலுள்ள பண்டாக்களுக்கும், பிராமனர்களுக்கும் தானம் செய்தபின்னர் அருகிலுள்ள வியாபாரி குழைந்தைகளும் வந்து சேர்த்தனர், அவர்களுக்கும் தானமளித்தோம்.
பின்னர் நேராக சாஸ்த்ரிகள் வீட்டிற்கு வந்தோம். உணவு சாஸ்திரிகள் வீட்டிலேயே தயாரித்திருந்தனர். பிராமன போஜனம் இரண்டு நபர்களுக்கு செய்வித்து தானம், தட்சணையும் அளித்தோம். மூதாதையருக்கு உணவளித்தது போன்ற திருப்தி ஏற்ப்பட்டது. பின்னர் சாஸ்த்ரிகளுக்கு சம்பாவனை செய்து ஆசி பெற்று நாங்களும் போஜனம் செய்தபின்னர் மடத்திற்கு வந்து சிரமபரிகாரம் செய்தபின்னர் 4.00 மணிக்கு புத்த கயா சென்றோம்.